தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும் அரசியல் போராக உருவெடுத்துள்ளது. தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அக்கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் தாமதித்து வருகிறார். இதுவரை அமைதி காத்து வந்த விஜய் தரப்பில் இருந்து, தற்போது முதல்முறையாக ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான கண்டனக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
தவெக நிர்வாகி டி.செல்வம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஆளுநர் அரசியல் சாசனத்தின் உதவியாளராகச் செயல்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட அதிகாரத்தைக் காட்டக்கூடாது என்று சாடினார். “தனிப்பெரும் கட்சியான தவெகவை அழைத்து சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்வதே ஆளுநரின் கடமை; ஆனால் அவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘மவுத் பீஸ்’ போலச் செயல்பட்டு டிராமா செய்கிறார்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விஜய்யைத் தமிழகத்தைக் காக்க வந்த ‘அவதார புருஷன்’ என்று குறிப்பிட்ட செல்வம், கடவுள் அருளால் விரைவில் ஊழலற்ற ஆட்சி அமையும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கூட்டணி மற்றும் ஆதரவு குறித்த விவகாரங்களில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் மட்டும் ஸ்டாலினின் பிடியில் இருப்பதால் குழப்பத்தில் இருப்பதாகவும் செல்வம் விமர்சித்தார். விசிக தொண்டர்கள் விஜய்யுடன் இணையவே விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், திருமாவளவன் தனது நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குவது திமுகவின் அழுத்தமே காரணம் எனத் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமமுக எம்எல்ஏக்கள் குறித்த குதிரை பேரப் புகார்களை முற்றிலுமாக மறுத்த செல்வம், தவெக யாரிடமும் பேரம் பேசவில்லை என்றும், கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும் காங்கிரஸும் தாங்களாகவே முன்வந்து ஆதரவு அளித்திருப்பதாகவும் கூறினார். டிடிவி தினகரன் கூறுவது அனைத்தும் பாஜகவின் தூண்டுதலால் சொல்லப்படும் பொய்கள் எனச் சாடிய அவர், திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கே குதிரை பேரம் பழக்கப்பட்டது, தவெகவிற்கு அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். விஜய்யின் பதவியேற்பு எப்போது நடக்கும் என்பதே இப்போது தமிழக அரசியலின் உச்சகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.
