மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

By Swetha on வைகாசி 9, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்திய தரகர்கள், அவருக்கும் அந்த மாற்றுத்திறனாளிக்கும் ஊட்டி கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்காகத் தரகுத் தொகையாக ஒரு பெரும் தொகையும் அந்தப் பெண்ணுக்குச் சீர் வரிசையாக நகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே, அந்தப் பெண் தனது கணவரிடம் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், பத்து நாட்கள் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்தப் பெண்ணின் செல்போனைத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

   

இதையடுத்து, அந்தப் பெண் மற்றும் தரகர்கள் மீது சந்தேகம் கொண்ட மாற்றுத்திறனாளி தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட திருமண மோசடி என்பதும், போலி தரகர்கள் மாற்றுத்திறனாளிகளை இலக்கு வைத்துப் பணத்தைப் பறித்து வருவதும் தெரியவந்துள்ளது. தற்போது காவல்துறையினர் அந்தப் பெண்ணையும், இதில் தொடர்புடைய தரகர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.