கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் நவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சென்னை கிண்டி பகுதியில் தனது தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் அவர் குளிப்பதற்காகக் கழிவறைக்குச் சென்றபோது, ஜன்னல் வழியாக ஒரு மர்ம வெளிச்சம் தெரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் நவ்யாவை ரகசியமாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட அந்தப் பெண், ஜன்னல் வழியாக அந்த நபரின் செல்போனைப் பிடுங்கியுள்ளார்.
தகாத வார்த்தைகளால் அப்பெண்ணைத் திட்டிய அந்த நபர், செல்போனைத் திரும்பப் பெற முயன்றுள்ளார். நவ்யா தைரியமாகச் சத்தமிட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் அந்த இடத்தில் சோதனை செய்தபோது, அந்த நபர் மற்றொரு செல்போனையும் அங்கு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இரண்டு செல்போன்களையும் கைப்பற்றிய நவ்யா, இது குறித்து ஜே-3 கிண்டி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து, போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 31 வயதுடைய முல்லைநாதன் என்பது உறுதியானது. இவர் நவ்யா தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே தனது நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், இவர் ஏற்கனவே அந்தப் பகுதியில் உள்ள பெண்களின் கழிவறைகளில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த போது பிடிபட்டவர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
முல்லைநாதனை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மேலும் இரண்டு செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த செல்போன்களில் உள்ள வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்க போலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் தங்கியிருக்கும் பகுதியில் நடந்த இந்த அருவருக்கத்தக்கச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
