தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக-விடம் ஆதரவு கேட்டு வரும் நிலையில், விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, “திமுகவை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி” என மிகக் கடுமையாக விமர்சித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற இடதுசாரிகள் மற்றும் விசிக-விடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தவெக ஆதரவு கேட்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக-வின் இந்த ஆதரவு கோரும் நடவடிக்கையில் எந்தவிதமான தர்க்க ரீதியான நியாயமும் இல்லை எனச் சாடிய சிந்தனை செல்வன், கொள்கை ரீதியாக முரண்பட்டுவிட்டு தற்போது அதிகாரத்திற்காகத் தங்களை நாடுவது “கூசவில்லையா?” என ஆவேசமாக வினவியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் தனது முடிவை அறிவிக்க உள்ள தருணத்தில், கட்சியின் பொதுச்செயலாளரிடமிருந்து வந்துள்ள இந்த அதிரடித் தாக்குதல், தவெக – விசிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.
