திமுக – அதிமுக கைகோர்த்தாலும் ஜெயிக்க முடியாது..! மிரள வைக்கும் தேர்தல் கணக்கு.. விஜய் தான் கிங்கா..?

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 117 என்ற மெஜாரிட்டி எண்ணிக்கையை எட்டுவதில் பெரும் சிக்கல் உள்ளது.

எண்ணிக்கை கணக்கின்படி பார்த்தால், திமுக 59 இடங்களிலும் அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவை இரண்டும் இணைந்தால் வெறும் 106 இடங்கள் மட்டுமே வரும். இவர்களுடன் மற்ற சிறிய கட்சிகளான விசிக (2), சிபிஎம் (2), சிபிஐ (2), ஐயுஎம்எல் (2) மற்றும் தேமுதிக (1) ஆகியவை கைகோர்த்தால் மொத்த எண்ணிக்கை 115 வரை வரும். அப்போதும் பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படும் என்பதால், பாமகவின் 4 இடங்கள் அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இவர்களால் ஆட்சியமைக்க முடியாது என்பது எதார்த்தமான நிலையாக உள்ளது.

   

அதே சமயம், தவெக தலைவர் விஜய் தற்போது 108 இடங்களுடன் ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியை நெருங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவிற்கு உள்ள நிலையில், இன்னும் 4 முதல் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் அவர் எளிதாக ஆட்சியமைக்க முடியும். இதனால் விசிக அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். ஒருவேளை அவர்கள் ஆதரவு தராமல் போனால், அதிமுகவின் ஆதரவைப் பெற வேண்டிய சூழல் விஜய்க்கு ஏற்படும், அவ்வாறு நடந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நிகழக்கூடும்.