தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவசியமாகியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை தவெக-விற்கு வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள பெரும்பான்மையை நிரூபிக்க விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் தரப்பு கோரியுள்ளது. இதற்காக தவெக தலைமை இந்தக் கட்சிகளிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்த மூன்று கட்சிகளும் தலா 2 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், இவர்களின் ஆதரவு தவெக ஆட்சி அமைப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இன்று கூடி ஆலோசித்து தங்களது இறுதி முடிவை அறிவிக்க உள்ளனர். குறிப்பாக, மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கான நிபந்தனைகளுடன் இவர்கள் தவெக-விற்கு ஆதரவு அளிப்பார்களா அல்லது மாற்று முடிவை எடுப்பார்களா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
