தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தவெக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரம் நடப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 30-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு கருதி புதுச்சேரி நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக ஆளுநரின் தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பு சட்டப்படி சரியானது என்றும், 118 எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டியது தவெகவின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணியிடம் 112 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்றும், பெரும்பான்மைக்கு இன்னும் 6 உறுப்பினர்கள் தேவை என்றும் அன்பழகன் சுட்டிக்காட்டினார். இந்த இக்கட்டான சூழலில், எடப்பாடி பழனிசாமி 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என அவர் தெரிவித்தார். திமுக அல்லது தவெக கூட அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கலாம் என்ற ஒரு “அதிசயம்” நடக்க வாய்ப்புள்ளதாகவும், அரசியலில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அன்பழகன், அதிகாரப் பதவிக்காக காங்கிரஸ் கட்சி “புரோக்கர்” வேலை செய்வதாகக் குற்றம் சாட்டினார். 52 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவால் விரட்டியடிக்கப்பட்ட காங்கிரஸ், தற்போது தன்மானத்தை இழந்து ஸ்டாலினுக்கு துரோகம் செய்துவிட்டு, நேற்று வந்த விஜய்யின் பின்னால் ஓடுவதாகச் சாடினார். கம்யூனிஸ்ட் கட்சிகளையும் தவெக பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், அவர்களின் இந்த அதிகார வெறியைத் திராவிடக் கட்சியான அதிமுக முறியடிக்கும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்படுவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். இது குறித்து விளக்கமளித்த அன்பழகன், சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலேயே எம்எல்ஏக்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க 200 சதவீதம் வாய்ப்பில்லை என்று கூறிய அவர், தமிழக அரசியலில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
