2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தோற்கடித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். 22-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், வி.எஸ். பாபு 82,997 வாக்குகளைப் பெற்றார்; மு.க. ஸ்டாலின் 74,202 வாக்குகளைப் பெற்று, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மு.க. ஸ்டாலின் 2011 முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தனது சொந்தக் கோட்டையிலேயே முதல்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் வி.எஸ். பாபுவுக்கு மிக முக்கியமான துறை ஒதுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் செல்வாக்கு மிக்கப் பகுதியாகக் கருதப்பட்ட கொளத்தூரிலேயே ஸ்டாலினை வீழ்த்தியதற்காக, அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தற்போது 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மே 7-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் வி.எஸ். பாபு அமைச்சராகப் பொறுப்பேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
