ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார். ரிஷிதா பரத்வாஜ் என்ற அந்தப் பெண், ஐந்து ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றி, முறையான நோட்டீஸ் காலத்தை முடித்து விலகிய பின்னரும், தனது உழைப்பிற்கான ஊதியத்தைப் பெற பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் எந்தப் பயனும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது பல முன்னாள் ஊழியர்கள் இதேபோன்ற புகார்களை முன்வைத்து வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்களுக்கு இதுபோன்று செட்டில்மென்ட் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ஏற்கனவே பிஎஃப் (PF) மற்றும் இதர நிலுவைத் தொகைகளை வழங்காதது தொடர்பாகப் பல சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், ஊழியர்களின் இந்தப் புதிய குற்றச்சாட்டு நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் “உழைப்பிற்கான பணத்தைக் கேட்க 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் டிஜிசிஏ ஆகியவை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைத்த ஊழியர்களை இப்படி அலைக்கழிப்பது முறையல்ல எனப் பலரும் இணையத்தில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்
