“எடப்பாடிக்கே பதவிப் பிரமாணம்”…. லோகேஷுக்கு இடைக்கால சபாநாயகர் பதவி?… சட்டசபை வரலாற்றில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ உருவாகியுள்ளது. இருப்பினும், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் கர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு இன்னும் 12 முதல் 14 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், இரண்டு வார கால அவகாசத்தையும் அவர் கோரியுள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில், புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்போகும் ‘தற்காலிக சபாநாயகர்’ (Pro-tem Speaker) யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனும், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தனை 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவருமான லோகேஷ் தமிழ்ச் செல்வனையே விஜய் இந்த பதவிக்கு முன்னிறுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் சீட் மறுக்கப்பட்ட நிலையில் தவெக-வில் இணைந்து, ஆளுங்கட்சி அமைச்சரையே வீழ்த்திய லோகேஷுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. வழக்கமாகச் சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவது மரபு என்றாலும், விஜய் தனது நம்பிக்கைக்குரிய இளம் முகமான லோகேஷை தேர்வு செய்வது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

தற்காலிக சபாநாயகராக லோகேஷ் நியமிக்கப்பட்டால், அவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து ஜாம்பவான்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அரங்கேறும். ஒருபுறம் ராஜ்மோகன் போன்றவர்களின் பெயர்கள் அடிபட்டாலும், அமைச்சரை வீழ்த்திய வீரர் என்ற அடிப்படையில் லோகேஷின் பெயரே முன்னிலையில் உள்ளது. எனினும், ஆளுநர் இந்த பரிந்துரையை ஏற்பாரா அல்லது சட்டமன்ற மரபுப்படி மூத்த உறுப்பினரை நியமிக்க வலியுறுத்துவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

   

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிப்பதில் விஜய் தீவிரமாக உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகர் நியமனம் என்பது வெறும் தொடக்கமே. அதன்பிறகு நிரந்தர சபாநாயகராக லோகேஷ் தொடருவாரா அல்லது அனுபவம் வாய்ந்த வி.எஸ். பாபு அல்லது ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 106 என்ற பலத்துடன் (சபாநாயகரைத் தவிர்த்து) களம் காணும் விஜய், இந்த ‘டேஞ்சர்’ ஜோனைத் தாண்டி தனது பலத்தை 118-க்கு மேல் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்கள் மிகப்பெரிய அதிரடிகளுக்குக் காத்திருக்கின்றன.