தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்குவதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். அதேவேளையில், த.வெ.க நிர்வாகிகளிடையே அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் மாற்றுத் திட்டம் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்திடம், த.வெ.க ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ஒரு புதிய கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும், அது குறித்துக் கட்சியின் தலைமை மற்றும் பொதுக்குழுவே இறுதி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். தனிப்பட்ட முறையில் த.வெ.க-விற்கு ஆதரவளிப்பது தொடர்பாகத் தான் எந்தக் கருத்தையும் கூற முடியாது எனத் தெரிவித்த அவர், பந்தை கட்சித் தலைமையின் பக்கமே திருப்பியுள்ளார்.
சி.வி.சண்முகத்தின் இந்தப் பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதிமுக தரப்பில் இருந்து ஆதரவு கிடைக்குமா அல்லது த.வெ.க தனது கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சிக் கட்டிலில் அமருமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். த.வெ.க-வின் இந்த அடுத்தக்கட்ட நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணை எட்ட விஜய் மேற்கொள்ளும் காய நகர்த்தல்கள் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.
