டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில் இருந்த பவர்பேங்க் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் கேபின் பகுதியில் புகை சூழ்ந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.
நிலைமையைக் கவனித்த விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தீயணைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்தினர். பாதுகாப்பு கருதி, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு அவசர கால வழி வழியாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் முழுமையாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பயணிகள் மாற்று விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானங்களில் லித்தியம் பேட்டரிகள் கொண்ட சாதனங்களைக் கொண்டு செல்லும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
