தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 8-ம் தேதிக்குள் பதவியேற்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெறக் கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் தமிழகத்தின் நிதி நிலையை நிலைகுலையச் செய்யும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஜய்யின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பெண்களுக்கான மாத உதவித்தொகை உயர்வு (ரூ. 2,500), இலவச மின்சாரம் (200 யூனிட்) மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டம் போன்றவை அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். குறிப்பாக, பெண்களுக்கான உதவித்தொகையை உயர்த்துவதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 21,617 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர, 200 யூனிட் இலவச மின்சாரத்தால் ரூ. 4,248 கோடியும், முதியோர் மற்றும் கைம்பெண் ஓய்வூதிய உயர்வால் சுமார் ரூ. 6,000 கோடிக்கும் மேலாகவும் கூடுதல் நிதி தேவைப்படும்.
மேலும், ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு ரூ. 15,000 வருமான ஆதரவு மற்றும் பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்கள் நிதிச் சுமையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். தற்போதைய தங்கம் விலையேற்றத்தால் தங்க மோதிரத் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒட்டுமொத்தமாக இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தற்போதைய நிதிப் பற்றாக்குறையுடன் கூடுதலாக சுமார் ரூ. 42,000 கோடி நிதி தேவைப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஏற்கனவே தமிழக அரசு 2026-27 நிதியாண்டில் ரூ. 1.22 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், த.வெ.க-வின் திட்டங்கள் இந்தச் சுமையை மேலும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு வழங்கப்படவுள்ள உதவித்தொகை போன்ற திட்டங்கள் கடுமையான நிபந்தனைகளுடன் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே நிதி நிர்வாகத்தைச் சமாளிக்க முடியும். சினிமா புகழைத் தாண்டி, நிஜ வாழ்வின் நிதி நெருக்கடிகளை விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது வரும் மாதங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
