தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் அதிரடி மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 107 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தவெகவிற்குத் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், திமுக கூட்டணியில் இருந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவை விஜய் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலூர், விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில், அவர்கள் ஆதரவு அளித்தால் தவெகவின் பலம் 112 ஆக உயரும்.
இந்த அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக தேர்தல் நிலவரம் மற்றும் தவெகவின் எழுச்சி குறித்த விரிவான அறிக்கையை மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்துள்ளார். பெண்கள் மற்றும் இளைஞர்களின் பேராதரவு விஜய்க்குச் சாதகமாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். தவெகவின் இந்த அபார வெற்றி தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியின் வருகையை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, ராகுல் காந்தி நேரடியாக விஜயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது ‘எக்ஸ்’ தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தவெகவின் வெற்றி இளைஞர்களின் எழுச்சியைப் பிரதிபலிப்பதாகப் பாராட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி ஆர்வம் காட்டியதாகச் சொல்லப்படும் நிலையில், தற்போது நேரடியாகவே ஆதரவு கோரப்பட்டிருப்பது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த ராகுல் காந்தி திட்டமிட்டு வரும் சூழலில், தவெகவுடன் கைகோர்ப்பது எதிர்காலத்திற்குச் சாதகமாக இருக்கும் என அவர் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது. திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி காங்கிரஸ் மேலிடத்திற்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய்யின் கோரிக்கையை ஏற்பது குறித்து காங்கிரஸ் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் புதிய கூட்டணி ஆட்சி அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
