தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் களம் கண்டு, இரண்டிலுமே அதிரடியாக முன்னிலை வகித்து வருகிறார். ஒருவேளை இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, விஜய் பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளும் பட்சத்தில், திருச்சி கிழக்கு தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா தவெக வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. இது தவெக மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே, இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை த்ரிஷா, திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்துவிட்டு நேரடியாக பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் விஜய்யை நேரில் சந்தித்து, தேர்தலில் தவெக பெற்று வரும் மாபெரும் வெற்றிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். த்ரிஷாவின் இந்தத் திடீர் வருகை மற்றும் அவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற தகவல், தமிழக அரசியலில் ஒரு புதிய ‘டுவிஸ்ட்’ ஆகப் பார்க்கப்படுகிறது.
