மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில், மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று குழந்தையின் தந்தை ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சமீர் மகாலே என்பவர், கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
குழந்தையின் தாய் தண்ணீர் பிடிப்பதற்காகச் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த சமயத்தில், சமீர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குழந்தையைத் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த குழந்தையின் சகோதரன், பயத்தில் சத்தம் போட்டுத் தனது தாயை உதவிக்கு அழைத்துள்ளார். சிறுவனின் சத்தத்தைக் கேட்டு தாய் ஓடி வருவதைக் கண்ட சமீர், அங்கிருந்து தப்பியோடி மறைந்துள்ளார். வீட்டிற்கு வந்த தாய் குழந்தைக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் நாசிக் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தலைமறைவாக இருந்த சமீர் மகாலேவை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூன்று வயதுக் குழந்தைக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
