“100 ஓட்டுகளில் மாறும் தலையெழுத்து”… வாக்குகள் சமமாக வந்தால் என்ன நடக்கும்? … இன்று நடக்கப்போகும் ‘திக் திக்’ நிமிடங்கள்…!

By Nanthini on வைகாசி 4, 2026

Spread the love

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாக இன்று அமையவுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8:00 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இம்முறை திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றுள்ள விஜய்யின் வருகை, பாரம்பரிய அரசியல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாளை தெரிந்துவிடும்.

ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு வலிமையானது என்பதை கடந்த கால தேர்தல் தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் போன்ற தொகுதிகளில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்பட்டது. அதேபோல், பல தொகுதிகளில் 1000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவியதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த ஆண்டும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் (Close Contest) அமையக்கூடும் என்பதால், ஒவ்வொரு சுற்றின் முடிவும் அரசியல் கட்சிகளிடையே மிகுந்த படபடப்பை உருவாக்கியுள்ளது.

   

வாக்கு எண்ணிக்கையின் போது ஒருவேளை இரண்டு வேட்பாளர்கள் சமமான வாக்குகளைப் பெற்றால், அது “டை” (Tie) என்று அழைக்கப்படும். இத்தகைய சூழலில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி “குலுக்கல் முறை” பின்பற்றப்படும். வேட்பாளர்களின் பெயர்கள் சீட்டில் எழுதப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் குலுக்கி எடுக்கப்படும். அதில் வரும் பெயருக்கே கூடுதல் ஒரு வாக்கு அளிக்கப்பட்டு அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதற்கு முன்னதாக, வேட்பாளர்களின் கோரிக்கையை ஏற்று வாக்குகள் மறுமுறை எண்ணப்படுவதற்கும் (Recounting) வாய்ப்புகள் உண்டு.

   

உள்ளாட்சித் தேர்தல்களில் இதுபோன்ற குலுக்கல் முறை வெற்றிகள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தேர்தலிலும், மும்பை மாநகராட்சித் தேர்தலிலும் வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றபோது குலுக்கல் முறையிலேயே வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர். ஒரு சிறு துண்டுச் சீட்டு ஒருவரின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிவிடும் வல்லமை கொண்டது என்பதற்கு இவையே சான்று. தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் அந்த “ஒற்றை வாக்கு” யாருக்குச் சாதகமாக அமையப்போகிறது என்பது இன்றைய பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும்.