வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம் கிடைத்துவிடும். ஆனால், இந்த முறை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், வெற்றியாளரைத் தீர்மானிக்க மாலை வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முன்னிலை நிலவரங்கள் உடனுக்குடன் வெளியானாலும், பெரும்பாலான தொகுதிகளில் நிலவும் கடும் போட்டியின் காரணமாக, இறுதி முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற பதற்றமான நிலையே நீடிக்கிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களமிறங்கியிருப்பது இந்தத் தேர்தலை நான்கு முனைப் போட்டியாக மாற்றியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனத் தெரிவதால், முக்கிய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு நூலிழையில் ஊசலாடுகிறது. இதனால், கடந்த காலங்களைப் போலன்றி, ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
கடந்த 2021 தேர்தலிலேயே சுமார் 39 தொகுதிகளில் 5,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்பட்டன. குறிப்பாக தி.நகர், தென்காசி உள்ளிட்ட 24 தொகுதிகளில் திமுக மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது. தற்போது தவெக போன்ற புதிய சக்திகளின் வரவால், இந்த வாக்கு வித்தியாசம் இன்னும் குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழல் நிலவுவதால், வேட்பாளர்கள் அனைவரும் இறுதி சுற்று வரை பெரும் பதற்றத்துடனேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்தின் ‘ECINet’ செயலி மற்றும் results.eci.gov.in இணையதளம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஒன் இந்தியா தளத்திலும் நிமிடத்திற்கு நிமிடம் துல்லியமான தேர்தல் அப்டேட்கள் மற்றும் கள நிலவரங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதையும், எந்தக் கட்சி அரியணையில் அமரும் என்பதையும் தீர்மானிக்கப்போகும் இந்த பரபரப்பான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
