அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணைப் பகுதி தற்போது கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழலிலும், இந்தியாவிற்காக 45,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு ‘சர்வ சக்தி’ என்ற கப்பல் அந்தப் பகுதியைத் துணிச்சலாகக் கடந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்காகக் கொண்டு வரப்படும் இந்த எரிவாயு, மே 13-ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அன்றாட சமையல் எரிவாயு தேவையில் பெரும் பகுதி இறக்குமதியையே நம்பியுள்ள நிலையில், இந்த விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பது நாட்டிற்கு மிக முக்கியமானதாகும். 18 இந்தியர்கள் உட்பட 20 பணியாளர்களுடன் பயணிக்கும் இக்கப்பல் பாதுகாப்பாக வெளியேறியது மத்திய அரசுக்கு நிம்மதியை அளித்துள்ளது. பல நாடுகள் இந்த வழியைப் பயன்படுத்த அஞ்சி வரும் நிலையில், இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்துத் தடைகளையும் தாண்டி இக்கப்பல் வருவது இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
