திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செட்டிபாளையம் சாலைப் பகுதியில், பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின் போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பேனர் ஒன்று திடீரெனக் கிழிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, காற்றின் வேகத்தில் கிழிந்த பேனர் எதிர்பாராத விதமாகப் போர்த்தியது போல் விழுந்தது. இதில் நிலைதடுமாறிய வாகன ஓட்டி சாலையிலேயே விழுந்தார். நல்வாய்ப்பாக, பின்னால் வந்த வாகனங்கள் வேகம் குறைவாக இருந்ததாலும், அவர் சுதாரித்துக்கொண்டதாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பதபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன. சூறைக்காற்று வீசும் போது இது போன்ற பலவீனமான பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. உரிய அனுமதியின்றி அல்லது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி வைக்கப்படும் பேனர்கள் குறித்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருவமழை மற்றும் காற்று வீசும் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: சூறைக்காற்றில் விளம்பர பேனர் கிழிந்து வாகன ஓட்டி மீது விழுந்த விபத்தின் பதபதைக்கும் காட்சி #Tiruppur #AccidentNews #StrongWinds #News18Taminadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/QNQkpFbM4v
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 2, 2026
