உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில், நள்ளிரவில் காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் ஒருவர், திருடன் எனத் தவறாகக் கருதப்பட்டு கிராம மக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மௌ மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் ராஜ்பர் என்ற அந்த இளைஞர், மர்தா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் உள்ள தனது காதலியைச் சந்திக்கச் சென்றுள்ளார். நேரடியாக வீட்டிற்குச் செல்லாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் மறைந்திருந்து அவர் காதலிக்காகக் காத்திருந்தபோது, அந்த வழியாக வந்த கிராம மக்கள் அவரைப் பிடித்துள்ளனர்.
சமீபகாலமாக அந்த கிராமத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வந்ததால், இளைஞனின் நடமாட்டத்தைக் கண்டு சந்தேகமடைந்த மக்கள், அவரைத் திருடன் என்று முடிவு செய்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமடைந்த மக்கள் கூட்டத்திடம் இருந்து தப்பிக்க வழியின்றி, தான் திருடன் அல்ல என்றும், தனது காதலியைப் பார்க்கவே வந்ததாகவும் அந்த இளைஞர் உண்மையை உரக்கக் கூறியுள்ளார். இதனால் திகைப்படைந்த கிராமத்தினர், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததுடன், இளைஞனின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது குடும்பத்தினரையும் வரவழைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மர்தா காவல்துறையினர், இளைஞனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் காதலியைச் சந்திக்க வந்த விவகாரம் உண்மையானது என்பதும், அவரிடம் திருடும் நோக்கம் ஏதுமில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தப்பட்டு, அந்த இளைஞர் அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார். காதல் விவகாரத்தில் திருடன் என நினைத்து இளைஞர் அடிபட்ட இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே தற்போது பேசுபொருளாகியுள்ளது.
