தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தற்போது கோவை மாவட்டத்தின் மீது திரும்பியுள்ளது. வழக்கமாக அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், இந்த முறை வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த தேர்தல்களில் கோவையில் திமுக சந்தித்த பின்னடைவைச் சரி செய்ய, முதலமைச்சர் ஸ்டாலின் தனது நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜியை கரூரிலிருந்து கோவைக்கு ‘ஸ்பெஷல் அஸைன்மென்ட்’ கொடுத்து அனுப்பியிருந்தார். கோவை தெற்கு தொகுதியில் நேரடியாகக் களமிறங்கிய செந்தில் பாலாஜி, மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றியது இத்தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத நிலையை மாற்றி, இந்த முறை குறைந்தபட்சம் 5 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் என அவர் கொடுத்த உறுதிமொழி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி வாரியான நிலவரப்படி, கோவை தெற்கு, வடக்கு, வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய 6 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக உறுதியாக இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் அதிமுகவுடன் கடுமையான போட்டி நிலவினாலும், முடிவுகள் சாதகமாக வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிமுகவின் பலமான கோட்டைகளாகக் கருதப்படும் தொண்டாமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகள் மட்டுமே தற்போதைய நிலையில் அதிமுகவுக்குச் சாதகமாக இருப்பதாக செந்தில் பாலாஜி தனது கள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி ஒருபுறமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் மறுபுறமும் கொங்கு மண்டலத்தில் சவாலாக இருந்தாலும், அதையெல்லாம் மீறி கோவையின் பெரும்பான்மை தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. செந்தில் பாலாஜியின் வியூகங்கள் வெற்றி பெற்றால், திமுகவின் தேர்தல் வெற்றி விழா கோவையிலேயே பிரம்மாண்டமாக நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக திமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். கோவையில் செந்தில் பாலாஜி மற்றும் வேலுமணி இடையே நிலவும் இந்த ‘அதிகாரப் போட்டி’யில் மக்கள் யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
