முருகப் பெருமானைத் தவிர வேறு யாருக்கும் ‘பூரண கும்ப மரியாதை’ அளிக்கக் கூடாது என்பது விதியாக உள்ளபோது, நடிகர் விஜய்க்கு எப்படி அந்த மரியாதை வழங்கப்பட்டது என வி.பி ஜெயக்குமார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வேல் கொடுப்பது இப்போது ஒரு பேஷனாக மாறிவிட்டதாகவும், பக்தர்களின் புரிதல் இன்றி வெங்கலக் கடையில் வாங்குவது போல வேல் வழங்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
விஜய்யுடன் வந்த பாதுகாவலர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், மாற்று மதத்தினர் “ஆலயத்தை மனப்பூர்வமாக நம்புகிறேன்” என கடிதம் எழுதித் தந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பியுள்ளார். அந்தப் பாதுகாவலர்கள் எந்த அடிப்படையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த அவர், திருச்செந்தூர் திரிசுதந்திரர்கள் வசதியாக வாழ்வதில் தங்களுக்குப் பொறாமை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், ஏழை பக்தர்கள் அர்ச்சனைக்கு வரும்போது அவர்களிடம் எரிந்து விழுவதைக் கைவிட வேண்டும் என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
