“வீட்டிற்குச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!… சாலையில் சென்ற காவலரை நசுக்கி கொன்ற ராட்சத கிரேன்.. மகாராஷ்டிராவில் பயங்கரம்”…!!!

By Muthu Mani on சித்திரை 30, 2026

Spread the love

மும்பை புறநகர் பகுதியான மன்குர்த் அருகே உள்ள சியோன்-பன்வெல் நெடுஞ்சாலையில், மேம்பாலப் பணியின் போது 200 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் கவிழ்ந்து விழுந்ததில் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கிழக்கு மண்டல பிரிவில் பொறுப்பு காவலராகப் பணியாற்றி வந்த 48 வயதான சந்தோஷ் சாவன், புதன்கிழமை இரவு 9.45 மணியளவில் தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டாடா பவர் ஹவுஸ் அருகே எதிர்பாராத விதமாக கிரேன் அவர் மீது கவிழ்ந்தது.

படுகாயமடைந்த காவலர் உடனடியாக வாஷி பகுதியில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து காரணமாக, செம்பூர் மற்றும் வாஷி பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான கிரேனை அகற்றும் பணி நீண்ட நேரம் நீடித்ததால், வாகன ஓட்டிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

   

இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், பணித்தளத்தில் இருந்த கனரக வாகனம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், கட்டுமானப் பணியை மேற்கொண்ட தனியார் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் மீது அலட்சியமாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மன்குர்த் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.