மயிலாடுதுறை அருகே 10-ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், பாத்திரம் தேய்க்க சொன்னதால் ஏற்பட்ட கோபத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால், மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த பிறகு, அவரது பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் கார்த்திகேயன் என்பவர் கொடுத்த பாலியல் தொந்தரவே தற்கொலைக்கு உண்மையான காரணம் என உறவினர்கள் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை டி.எஸ்.பி பாலாஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். காவல்துறையினரின் உறுதியை ஏற்று மறியல் கைவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
