உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நரேசிங் என்பவரது குடும்பத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது மகள் கோவிந்தப்பிரியா (21), ஓசூரைச் சேர்ந்த சூர்யா (26) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், பழிவாங்கும் நோக்கில் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு சூர்யாவின் வீட்டில் கோவிந்தப்பிரியா வசித்து வந்தார். இந்நிலையில், கார் ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) அடித்து நிலைகுலையச் செய்த கும்பல், கோவிந்தப்பிரியாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் கடத்தியது. பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சூர்யா அளித்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். கடத்தப்பட்ட பெண்ணை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில், கர்நாடக மாநில எல்லைக்குள் பதுங்கியிருந்த பெண்ணின் தாய் சகுந்தலா மற்றும் அவரது சகோதரர்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கடத்தப்பட்ட கோவிந்தப்பிரியா பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உறவினர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
