திருச்செந்தூர் To ஷீரடி!… ‘நீல’ சட்டை அணிந்து ஷீரடியில் சாய் பாபாவை தரிசித்த விஜய்… சமூக வலைதளங்களை அதிரவைக்கும் புகைப்படங்கள்…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியைத் தவிர, மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களைக் களம் இறக்கிய விஜய், எடப்பாடியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பதிவான இந்த வாக்குகள் வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

தேர்தல் பணிகள் மற்றும் தீவிரப் பிரச்சாரங்களை முடித்த கையோடு, நடிகர் விஜய் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற அவர், விஸ்வரூப தரிசனம் செய்து சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற அவர், ஷீரடி சாய்பாபா கோயிலில் பாபாவின் பாதத்தைத் தொட்டு வணங்கிப் பிரசாதம் பெற்றார். இந்த ஆன்மீகப் பயணங்கள் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

   

மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், அடுத்ததாகப் புனித மெக்கா நகருக்குச் செல்லவும் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிரச்சாரத்தின் போது, திருச்சியில் உள்ள அந்தோணியார் ஆலயம், பச்சநாச்சி அம்மன் கோயில் மற்றும் மசூதி என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அவர் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து மதத் தலங்களுக்கும் சென்று அவர் மேற்கொள்ளும் இந்தப் பயணம், ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.