தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஆன்மீகப் பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, தனது அடுத்த திட்டமாக மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வதற்காக இன்று (ஏப்ரல் 29) நீலாங்கரையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சீரடி விமான நிலையத்திற்குச் செல்லும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தலம் சென்று பிரார்த்தனை செய்யத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் களத்தில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள விஜய், முடிவுகள் வருவதற்கு முன்னதாகத் தொடர்ந்து முக்கியக் கோவில்களில் வழிபாடு நடத்தி வருவது அவரது தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர்.
