ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சர்வ சாதாரணமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருவதால், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதுடன், இரவு நேரங்களில் நிலவும் கடுமையான புழுக்கத்தால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
இந்த வெப்ப அலை பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் புதிதாக ‘வெப்ப தடுப்பு பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு 5 சிறப்பு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஓஆர்எஸ் (ORS) கரைசல்கள் வழங்கவும் போதிய மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், காபி, டீ மற்றும் கார்போனைட் குளிர்பானங்களைத் தவிர்த்து இளநீர், மோர், எலுமிச்சை சாறு மற்றும் பழச்சாறுகளைப் பருக வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்டம் முழுவதும் அவசரத் தேவைகளுக்காக 94,858 ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் 13,592 ஐ.வி (IV) திரவங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்குப் போதிய குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுமாறும், அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
