தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் அதீத உற்சாகம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பது போன்ற சித்திரங்கள் அடங்கிய காலண்டர்கள் இன்ஸ்டாகிராமில் விற்பனைக்கு வந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்திருப்பது போன்றும், அவருக்கு முன்பாக ‘சி.ஜோசப் விஜய் முதல்வர்’ என்ற பெயர் பலகை இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலண்டர், தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சமீபத்தில் தவெக சார்பிலான உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில் விஜய்க்கு உள்துறை என்றும், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் போன்ற முக்கிய நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவின. இருப்பினும், இது திமுகவினரின் பொய் பிரச்சாரம் என்று அக்கட்சியின் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், எம்.ஜி.ஆரின் “நான் ஆணையிட்டால்” பாடலை பின்னணியில் ஒலிக்கச் செய்து, வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதியை மையப்படுத்தி இந்தக் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் விஜய்யின் கட்சிக்கு 12 சதவீத வாக்குகள் மற்றும் ஒற்றை இலக்கத்திலேயே இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளன. 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் தவெக, எடப்பாடி தொகுதியில் மட்டும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தகைய கள யதார்த்தம் ஒருபுறம் இருக்க, கட்சித் தொண்டர்கள் இப்போதே அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுவிட்டது போன்ற மனநிலையில் வலம் வருவது பொதுமக்களிடையே ‘நிறைகுடம் தழும்பாது’ என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
நிதானமாகச் செயல்பட வேண்டிய அரசியல் களத்தில், தவெக தொண்டர்களின் இந்த ‘அலப்பறைகள்’ கட்சிக்கு சாதகமாக அமையுமா அல்லது பொதுமக்களின் கேலிக்கு உள்ளாக்குமா என்பது மே 4-ஆம் தேதி தெரிந்துவிடும். “கஜானா காலியானால் விஜய் இரண்டு படம் நடித்தால் நிதி நிலைமை சீராகிவிடும்” என்பது போன்ற ரசிகர்களின் விசித்திரமான கருத்துகளும், இந்த முதல்வர் காலண்டர் விற்பனையும் தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் நகைச்சுவையான போக்கை உருவாக்கியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
