கர்நாடக மாநிலம் சிர்சி பகுதியில் ஷிபாகான் என்ற இளம்பெண்ணும், ஒரு மருத்துவ மாணவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அவருக்கு வேறொரு நபருடன் அவசரமாகத் திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். திருமணத்தன்று தாலிக்கட்டும் சுப முகூர்த்த நேரம் நெருங்கிய வேளையில், மணக்கோலத்தில் இருந்த ஷிபா தனது அறையிலிருந்து ரகசியமாகத் தப்பித்துக் காதலனுடன் ஓடிவிட்டார்.
மணப்பெண்ணைக் காணாத அதிர்ச்சியில் மணமகன் வீட்டார் உறைந்து போன நிலையில், இருவீட்டு உறவினர்களிடையே பெரும் சோகம் நிலவியது. இதனையடுத்து அந்தத் திருமணம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தனது மகளைக் காதலன் கடத்திச் சென்றுவிட்டதாகப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்த காதல் ஜோடியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
