தூத்துக்குடி திமுக நிர்வாகி ஆரோக்கியதாஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் கீதா ஜீவன் தேர்தல் பணிக்காகக் கொடுத்த பணம் பொதுமக்களுக்குச் சரியாகச் சென்றடையவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். திரேஸ்புரம் பகுதியிலுள்ள சில திமுக வட்டச் செயலாளர்கள் மற்றும் கவுன்சிலரின் கணவர் ஆகியோர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பட்டுவாடா செய்யாமல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டதாக அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடு காரணமாக தூத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் திமுகவுக்குக் குறைவான வாக்குகளே கிடைக்கும் என்றும், அந்த ஓட்டுகள் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என திமுகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தவே இத்தகைய வீடியோக்கள் வெளியிடப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
