தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் மு.க.அழகிரி வெளியிட்ட “யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்” என்ற கருத்து திமுக மேலிடத்தை, குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது. திமுகவின் வெற்றியை உறுதிபடக் கூறாமல் அழகிரி மதில்மேல் பூனையாகப் பேசியது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது உளவுத்துறை அளித்துள்ள ரகசிய ரிப்போர்ட் முதல்வருக்கு நிம்மதியைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
அந்த அறிக்கையில், திமுக கூட்டணி 165 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 60 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 10-க்கும் குறைவான இடங்களையே பெறும் என அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் வெளியான பின்னரே, முதல்வர் ஸ்டாலின் நிதானமடைந்து தேர்தல் பணிகளில் மீண்டும் உற்சாகத்துடன் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
