ஜார்கண்டில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியவர்கள் சென்ற கார், உத்தரபிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி கோர விபத்துக்குள்ளானது. தோஹரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜார்கண்ட் பதிவு எண் கொண்ட அந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த டிரெய்லர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், கார் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்தது. காரில் பயணம் செய்தவர்களுடன் இருந்த அவர்களது செல்ல நாயும் இந்த விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
