“சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமருக்கு வந்த கொடூர நோய்”… இரண்டு மாதங்களாக இஸ்ரேல் காத்து வந்த பேரதிர்ச்சி ரகசியம்…!

By Nanthini on சித்திரை 25, 2026

Spread the love

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். 76 வயதான அவருக்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது ஒரு சிறிய அளவிலான கட்டி கண்டறியப்பட்டது. போர்க்கால சூழலில் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்தத் தகவலை அவர் ரகசியமாக வைத்திருந்தார். தற்போது சிகிச்சை முடிந்து அவர் ஆரோக்கியமாக இருப்பதால், இந்த உண்மையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

ஈரானுடனான போர் உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் இச்செய்தியை வெளியிட்டால், அது இஸ்ரேலுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை ஊக்குவிக்கும் என நெதன்யாகு கருதினார். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் ஈரான் மீதான தாக்குதலின் போது நெதன்யாகு இறந்துவிட்டதாக AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தனது உடல்நிலை குறித்த தெளிவை அளிக்கவும் அவர் தற்போது முன்வந்துள்ளார்.

   

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ள ‘புரோஸ்டேட்’ சுரப்பியில் ஏற்படும் பாதிப்பாகும். அக்ரூட் பருப்பின் அளவில் இருக்கும் இந்தச் சுரப்பியில் செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து கட்டியாக மாறும் போது அது புற்றுநோயாகக் கருதப்படுகிறது. மற்ற புற்றுநோய்களை விட இது மிக மெதுவாக வளரக்கூடியது என்பதால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் 100% குணப்படுத்த முடியும் என்பது மருத்துவ ரீதியான உண்மையாகும்.

   

 
Shutterstock

நெதன்யாகுவுக்கு ஆரம்பக்கட்ட பாதிப்பு மட்டுமே இருந்ததால், அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாமலேயே உயர் ஆற்றல் கொண்ட கதிர்கள் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக ஹதாசா மருத்துவமனை உறுதி செய்துள்ளது. தற்போது அவர் உடலில் நோய்க்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்றும், அவர் முழு சுறுசுறுப்புடன் தனது பணிகளைத் தொடர்வதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.