விஜய்க்கு வந்த ‘திடீர்’ கடிதம்: அதிரடி காட்டிய பீட்டா… தவெக-விற்குக் கிளம்பிய புதிய சிக்கல்..!

By Nanthini on சித்திரை 24, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி வண்ணங்கள் பூசப்பட்ட புறாக்களைப் பறக்கவிட்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக கட்சியின் கொடி நிறத்தை ஒத்த சாயங்களை புறாக்களின் உடலில் பூசி, அவற்றை மேடையில் இருந்து பறக்கவிட்ட செயலுக்கு விலங்கு நல அமைப்பான ‘பீட்டா இந்தியா’ (PETA India) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விஜய்க்கு கடிதம் எழுதியுள்ள அந்த அமைப்பு, அரசியல் லாபத்திற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ வாயில்லாப் பிராணிகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், அந்த கடிதத்தில் விலங்குகளும் பறவைகளும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது சித்தாந்தத்திற்கும் சொந்தமானவை அல்ல என்பதை பீட்டா சுட்டிக்காட்டியுள்ளது. பறவைகளின் உடலில் ரசாயன வண்ணங்களைப் பூசுவது அவற்றின் இறக்கைகளுக்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு, இது போன்ற செயல்கள் பறவைகளைத் துன்புறுத்துவதற்குச் சமம் என்றும் பீட்டா கவலை தெரிவித்துள்ளது. எதிர்காலப் பிரசாரங்களில் இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், அரசியல் களத்தில் இருந்து விலங்குகள் மற்றும் பறவைகளை விடுவிக்குமாறும் தவெக தலைவருக்கு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.