மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவசரச் சிகிச்சைக்காகப் பயன்படும் ஆம்புலன்ஸில் காதல் ஜோடி ஒன்று தனிமையில் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற ஆம்புலன்ஸின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அங்கிருந்த சிலர் அந்த வாகனத்தை சில கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது வாகனத்தின் உள்ளே காதலர்கள் உல்லாசமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவர்களைக் கீழே இறக்கி கடுமையாகக் கண்டித்தனர். உயிரைக் காக்கும் உன்னதமான வாகனத்தை இதுபோன்ற தவறான செயல்களுக்குப் பயன்படுத்திய ஓட்டுநரின் போக்கைக் கண்டு மக்கள் கொதிப்படைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அவசரச் சேவையில் ஈடுபடும் வாகனங்கள் எவ்விதத் தடையுமின்றிச் செல்ல முன்னுரிமை வழங்கப்படும் நிலையில், அதைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் என்பது ஒரு புனிதமான மருத்துவச் சேவை என்பதை மறந்து, அதைத் தனிப்பட்ட இன்பத்திற்காகப் பயன்படுத்திய இந்த வினோதச் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
