சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

By Devi Ramu on சித்திரை 22, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான இவருக்குத் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், கட்சித் தலைமை விஜய்யைச் சந்திப்பதற்கே அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் செங்கோட்டையனுக்காக விஜய் ஒருமுறை கூட பிரசாரம் செய்ய வராதது, இருவருக்கும் இடையிலான விரிசலை உறுதிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தனது அரசியல் அனுபவத்திற்கு உரிய மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவுக்கே திரும்பலாம் அல்லது திமுக பக்கம் செல்லலாம் எனப் பலமான பேச்சுகள் அடிபடுகின்றன. தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்த விஜய், தனது கட்சியின் சீனியர் வேட்பாளரான செங்கோட்டையனின் தொகுதியைப் புறக்கணித்தது உட்கட்சி மோதலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மூத்த தலைவரைத் தக்கவைத்துக் கொள்ளத் தெரியாமல் தவெக தலைமை காட்டும் இந்த அலட்சியம், அக்கட்சியின் அரசியல் முதிர்ச்சியைச் சந்தேகிக்க வைப்பதாக அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.