“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on சித்திரை 21, 2026

Spread the love

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான ஆர்.கே. சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடையும் தருவாயில், “காரைக்குடி மக்களே விட்றாதீங்க” என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ள அவர், சித்தாந்தங்களைக் கடந்து சீமானை ஒரு சிறந்த மனிதராகவும், பண்பாளராகவும் முன்னிறுத்திப் பேசியுள்ளார்.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி) கட்சியின் அகில இந்தியத் துணைப் பொதுச்செயலாளராக ஆர்.கே. சுரேஷ் பொறுப்பு வகித்து வருகிறார். தான் தார்மீக ரீதியாகத் தனது கூட்டணிக்கே ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டாலும், ஒரு தமிழனாகச் சீமான் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார். சீமானின் 15 ஆண்டுகாலத் தொடர் போராட்டத்தையும், அவரது மன உறுதியையும் பாராட்டி இந்த ஆதரவை அவர் வழங்கியுள்ளார்.

   

குறிப்பாக, “சீமானின் வெற்றி என்பது அவர் தனிப்பட்ட முறையில் பெறும் வெற்றி அல்ல; அவரை நம்பி வாக்களித்த 40 லட்சம் மக்களின் ஆசை” என்று ஆர்.கே. சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். சீமானின் சில கோட்பாடுகள் தனது கொள்கைகளோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், தமிழ் தேசியத்தின் மகனாக அவரைத் தனக்குப் பிடிக்கும் என்றும், ஒருமுறை அவருக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள் என்றும் அவர் காரைக்குடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   

சொந்த மாவட்டமான சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சீமான் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே அவருக்கு ஆதரவாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பிரசாரத்தின் கடைசி நாளில் வெளியாகியுள்ள இந்த வீடியோ, காரைக்குடி தொகுதித் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.