“அப்பா கையைப் பிடிச்சு வரல”… உதயநிதியை வச்சு செய்த தமிழிசை… ஆடிப்போன அரசியல் களம்…!

By Nanthini on சித்திரை 21, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியில் பாஜாக வேட்பாளராகக் களம் காண்கிறார். தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் எல். முருகன் ஆகியோர் போட்டியிடும் நிலையில், அண்ணாமலை மட்டும் ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசிய தமிழிசை, “அண்ணாமலை தனக்கு சீட் வேண்டாம் என்று அவராகவே விருப்பப்பட்டு கேட்டுக்கொண்டதால் தான் அவர் போட்டியிடவில்லை; இதில் மறைப்பதற்கு எந்த ரகசியமும் இல்லை” என்று ஒற்றை வரியில் விளக்கமளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின், “தமிழிசை அக்கா 6 முறை தேர்தலில் தோற்றவர், அதனால் அவருக்கு ஆளுநர் போன்ற ரப்பர் ஸ்டாம்பு பதவிகள் தான் கிடைக்கும்” என விமர்சித்திருந்தார். இதற்குத் தமிழிசை மிகவும் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “உதயநிதி மட்டும் தனியாகக் கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் நின்றிருந்தால் 8 முறை தோற்றிருப்பார். அவர் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவர். ஆனால் நான் என் தந்தையின் கொள்கைக்கு எதிராக நின்று, சொந்த உழைப்பால் அரசியலில் அங்கீகாரம் பெற்றவள். திமுகவில் ஒரு சாதாரணத் தொண்டனுக்கு உதயநிதிக்குக் கிடைத்த வாய்ப்பு கிடைக்குமா?” எனக் கேள்வி எழுப்பி சமூக நீதி குறித்துச் சாடியுள்ளார்.

   

மேலும், திமுகவின் தேர்தல் வெற்றி முறைகள் குறித்துப் பேசிய தமிழிசை, கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். 1967-ல் தனது தந்தை இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, திமுகவினர் ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட அழியும் தன்மையுடைய ‘பொய் மை’யைப் பயன்படுத்தி கள்ள ஓட்டுப் போட்டு வெற்றி பெற்றதாகத் தனது தந்தை குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார். அதேபோல், தற்போது மயிலாப்பூர் தொகுதியில் மட்டும் சுமார் 85 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தனை காலம் போலி வாக்காளர்களை வைத்துத்தான் திமுக வெற்றி பெற்று வந்ததா என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

   

மயிலாப்பூர் தொகுதியுடன் தனக்கிருக்கும் 40 ஆண்டுகால பந்தத்தைப் பற்றிப் பேசிய தமிழிசை, தான் ஒரு சென்னைவாசி என்பதையும், வாரத்தில் மூன்று நாட்கள் மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்குத் தவறாமல் வருவதையும் குறிப்பிட்டார். முன்னதாக எடப்பாடி பழனிசாமியுடன் தான் பிரச்சார வாகனத்தில் சென்றது தொகுதிப் பொறுப்பாளர் என்ற முறையில்தானே தவிர, அப்போது தான் வேட்பாளராக நிறுத்தப்படுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். உதயநிதி போன்றவர்கள் தனது அரசியல் அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், விளையாட்டுத்தனமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.