“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

By Muthu Mani on சித்திரை 20, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப் பிரச்சாரம் பெரும் மக்கள் கடலில் மிதந்தது. சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கி.மீ தூரம் வரை திறந்த வாகனத்தில் வலம் வந்த விஜய், தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சைகை மூலமாகவும், வேட்பாளர்கள் ரவி மற்றும் விஜயகுமார் ஆகியோரின் கரங்களை உயர்த்திப் பிடித்தும் உற்சாகமாக வாக்கு சேகரித்தார்.

விஜய்யைக் காண்பதற்காகத் திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனதால், பாதுகாப்புப் பணியில் இருந்த 800-க்கும் மேற்பட்ட போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொண்டர்கள் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலைத் தடுப்புகள் மீது ஏறிக்குதித்து ஓடியதால் பதற்றம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், தொண்டர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றால் மட்டுமே விஜய் உள்ளே வர முடியும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த பின்னரே ஓரளவு வழி கிடைத்தது. இருப்பினும் விஜய் வந்தவுடன் தொண்டர்களின் ‘அலப்பறை’ மீண்டும் உச்சத்தை எட்டியது.

   

ஆவேசமடைந்த தொண்டர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த சால்வைகளை விஜய் மீது வீசி எறிந்தும், கோஷமிட்டும் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். இந்த அதீதக் கூட்ட நெரிசலில் சிக்கி பலரின் செருப்புகள் சாலைகளிலேயே சிதறிக் கிடந்தன. இந்தத் தள்ளுமுள்ளுவைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியதில், பிரச்சாரத்திற்கு ஆடியோ அமைத்துக் கொடுத்தவர்களின் நான்கு மைக்குகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்குகளைத் திருப்பித் தருமாறு அவர்கள் மேடையிலேயே உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

   

மேலும், கூட்டத்திற்கு வந்த இரண்டு பெண்களின் செல்போன்கள் திருடு போனதால், அவர்கள் கண்ணீருடன் வீட்டிற்குத் திரும்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த அதிரடி வாகனப் பிரச்சாரத்தால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளான போதிலும், தவெக தொண்டர்களின் உற்சாகம் அந்தப் பகுதியையே அதிர வைத்தது.