“என் தம்பியை இழந்துட்டேன்..” – பிரசாரத்தில் நடந்த விபரீதம்… மேடையிலேயே கண்ணீர் மல்கிய விசிக தலைவர்….!

By Nanthini on சித்திரை 20, 2026

Spread the love

திட்டக்குடியில் திமுக வேட்பாளரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது, மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக விசிக தலைவர் திருமாவளவன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கணேசனை ஆதரித்து நேற்று மாலை திருமாவளவன் பிரசாரம் செய்தார். அப்போது பிரசாரப் பகுதியில் சாலையோரம் இரும்பு கம்பிகளில் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அங்குள்ள மின்மாற்றி (Transformer) அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பியை ம.பொடையூரைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் தொட்டபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

   

படுகாயமடைந்த அஜித்தை உடனடியாக மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் அறிந்ததும் பிரசாரக் களத்தில் இருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் சோகமும் நிலவியது. உயிரிழந்த இளைஞர் அஜித்தின் உடலுக்கு திருமாவளவன் மற்றும் அமைச்சர் கணேசன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

   

இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள திருமாவளவன், “தம்பி அஜித்தின் இழப்பு நெஞ்சை உலுக்கும் பெருந்துயரம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட அஜித்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், கட்சியின் சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார். தேர்தல் உற்சாகத்திற்கு இடையே நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.