ஐ.பி.எல். 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி இதுவரை சந்தித்திராத மோசமான சரிவைச் சந்தித்து வருகிறது. விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் அந்த அணி தவிக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் கிடைத்த ஒரு புள்ளி மட்டுமே அந்த அணியின் தற்போதைய ஆறுதல். அணியின் இந்த நிலைக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்ஷித் ராணா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோரின் காயம் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பையின் போது காயமடைந்த பதிரனா, அதிலிருந்து மீள நீண்ட காலம் எடுத்துக்கொண்டது அந்த அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தியுள்ளது.
தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் உடற்தகுதியை நிரூபித்து, தடையில்லாச் சான்றிதழ் (NOC) பெற்ற பதிரனா, ஒருவழியாக இன்று கொல்கத்தா அணியுடன் இணைந்துள்ளார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான பலப்பரீட்சையில் கொல்கத்தா களமிறங்கினாலும், இந்தப் போட்டியில் பதிரனா விளையாட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. கொல்கத்தா அணியின் மருத்துவக் குழுவினர் அவரது பிட்னஸை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாலும், அதற்காக இரண்டு மூன்று பயிற்சி அமர்வுகள் தேவை என்பதாலும், இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் தான்.
அடுத்த போட்டியில் இருந்து பதிரனா அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகை கொல்கத்தாவின் பந்துவீச்சுக்கு புத்துயிர் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீசனில் நட்சத்திர பந்துவீச்சாளர்களான சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தவும், ரன்களைக் கட்டுப்படுத்தவும் திணறி வருவது கே.கே.ஆர் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. டெத் ஓவர்களில் பதிரனாவின் ‘யார்க்கர்’ பந்துகள் கைகொடுத்தால் மட்டுமே கொல்கத்தா அணி இனிவரும் போட்டிகளில் வெற்றிக் கணக்கைத் தொடங்க முடியும்.
