அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வரானால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ₹60,000 மதிப்பிலான நேரடிப் பலன்கள் கிடைக்கும் என்ற வாக்குறுதியை முன்வைத்து அதிமுகவினர் தற்போது தீவிர வீடு வீடாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்களில், குடும்ப உதவித்தொகையாக ₹10,000, மகளிருக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ₹24,000, விலையில்லா சிலிண்டருக்காக ₹3,000, பொங்கல் பரிசாக ₹2,000 மற்றும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, சமையல் எண்ணெய்க்கான மானியத் தொகையாக ₹3,000 எனப் பல்வேறு சலுகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதோடு ஒருமுறை வழங்கப்படும் ₹12,000 மதிப்பிலான விலையில்லா பிரிட்ஜ் உள்ளிட்டவற்றையும் சேர்த்து, ஒரு குடும்பம் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக ₹60,000 வரையிலான பலன்களைப் பெற முடியும் என அக்கணக்கீடு விளக்குகிறது. தேர்தல் களத்தில் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் கொண்டு செல்லப்படும் இந்த “நேரடிப் பலன்” வாக்குறுதி, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
