ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்’ (USS George H.W. Bush) செங்கடல் வழித்தடத்தைத் தவிர்த்து, ஆப்பிரிக்காவைச் சுற்றி நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. பொதுவாக மத்திய தரைக்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் வழக்கமான பாதையை விடுத்து, சுமார் 6,000 மைல்கள் கூடுதல் தூரம் கொண்ட ஆப்பிரிக்காவின் நமிபியா கடற்கரை வழியாக இந்தப் போர்க்கப்பல் பயணிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹூதி அமைப்பினர் செங்கடல் பகுதியை அமெரிக்கக் கப்பல்களுக்கு ‘தடைசெய்யப்பட்ட மண்டலமாக’ அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அமெரிக்கக் கடற்படை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இந்த நீண்ட சுழற்சிப் பயணம் காரணமாக பயண நேரம் சுமார் 12 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் மற்றும் இதர பராமரிப்புச் செலவுகளுக்காகப் பல மில்லியன் டாலர்கள் கூடுதலாகச் செலவாகும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தியால் இயங்கும் போர்க்கப்பலே தாக்குதலுக்கு அஞ்சி பாதையை மாற்றியது உலக நாடுகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் முக்கியப் புள்ளியாக விளங்கும் பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உலகளாவிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் ஏற்கனவே பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. தற்போது அமெரிக்காவின் முக்கியப் போர்க்கப்பலே இந்த அச்சுறுத்தலுக்குப் பணிந்து பாதையை மாற்றியிருப்பது, செங்கடல் பகுதியில் நிலவும் போர்ச் சூழலின் தீவிரத்தையும், அமெரிக்காவின் கடல்சார் ஆதிக்கத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலையும் வெளிப்படுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
