“சீனி என எழுதி வைத்து அதை நக்கினால் இனிக்காது” நடிகர் விஜய்யை வம்புக்கு இழுத்த நயினார் நாகேந்திரன்..!!

By Soundarya on சித்திரை 15, 2026

Spread the love

திருநெல்வேலி சந்திப்பில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையைச் சுட்டிக்காட்டினார். தமிழகத்திற்கு இதுவரை பிரதமர் ரூ. 14.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 11 முறை தமிழகம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் மலேசியா முதல் ஐநா சபை வரை எங்கு சென்றாலும் தமிழின் பெருமையைப் பேசி வருவதாகவும், வாரணாசி பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை அமைத்ததுடன், திருக்குறளைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார் எனப் புகழாரம் சூட்டினார்.

பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 15) கன்னியாகுமரிக்கு வருகை தந்து, வேப்பமூடு சந்திப்பு முதல் வடசேரி சந்திப்பு வரை நடைபெறும் பிரம்மாண்டமான ‘ரோடு ஷோவில்’ பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், விஜய் ஒரு சினிமா நடிகர் என்றும், அவரால் ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமில்லை என்றும் விமர்சித்தார். “சீனி என எழுதி வைத்து அதை நக்கினால் இனிக்காது” என்று குறிப்பிட்ட அவர், சமூக வலைதளச் செய்திகளை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்றும், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.