“எங்க குடும்பத்தையே பிரிச்சது நீங்கதான்”… அப்பல்லோவில் ஜி.கே.மணியை வெளுத்து வாங்கிய ராமதாஸ் மகள் கவிதா… பாமகவில் ‘கிளைமாக்ஸ்’ மோதல்…!

By Nanthini on சித்திரை 15, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சி தற்போது அன்புமணி ராமதாஸின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது சொந்தக் கட்சியிலேயே ஓரங்கட்டப்பட்டுள்ள சூழல் உருவாகியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளின் தவறான வழிகாட்டுதலால் தான் ராமதாஸ் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தைலாபுரம் வட்டாரங்களில் சலசலப்புகள் நீடிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, சேலம் பொதுக்கூட்டத்தில் மயக்கமடைந்த ராமதாஸ், தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இக்கட்டான சூழலில், ராமதாஸைப் பார்க்க வந்த ஜி.கே.மணியை ராமதாஸின் மகள் கவிதா கணேஷ் கடுமையாகச் சாடியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் ஜி.கே.மணியைப் பார்த்ததும் ஆவேசமடைந்த கவிதா கணேஷ், “எங்கள் குடும்பத்தைப் பிரித்ததே நீங்கள்தான், இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள்?” என முகத்திற்கு நேராகவே கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், சதித் திட்டங்கள் தீட்டி குடும்பத்தைப் பிரித்துவிட்டு, தனது மகனுக்குக் காங்கிரஸில் சீட் வாங்கிவிட்டதாக ஜி.கே.மணி மீது அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். “திமுகவுக்குப் போவதாக இருந்தால் தாராளமாகப் போங்கள், உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. ஆனால், பதவிக்காகச் சதி செய்து இந்தத் துரோகத்தைச் செய்தது போதும்; மரியாதையாக இங்கிருந்து வெளியேறுங்கள்” என அவர் கொந்தளித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

   

கட்சியின் தலைமைப் பொறுப்பு தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல், தற்போது தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றப் படிகளையே மிதித்துள்ளது. அன்புமணி ராமதாஸ் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் தனது ஆதரவாளர்களைக் களம் இறக்கியுள்ள நிலையில், அதிருப்தியில் உள்ள ராமதாஸ் தனது கட்சிப் பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்த முடியாத சூழலில் புதிய அமைப்பை உருவாக்கித் தனித்துப் போட்டி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இந்த அரசியல் பிளவு, ராமதாஸ் குடும்பத்திற்குள் மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதையே கவிதா கணேஷின் ஆவேசம் காட்டுகிறது.

   

2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த உள்வீட்டுக் கலவரம் அக்கட்சியின் தொண்டர்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் கட்சியின் முகமாகத் திகழ்ந்த ஜி.கே.மணி, தற்போது ராமதாஸ் குடும்பத்தாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருப்பது, கட்சியின் எதிர்கால அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. கவிதா கணேஷின் சாடலால் நிலைகுலைந்து போன ஜி.கே.மணி, எவ்வித பதிலும் கூறாமல் மருத்துவமனையில் இருந்து அவசரமாக வெளியேறியது தைலாபுரம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.