சத்தீஸ்கர் மாநிலம் சக்தி (Sakti) மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தில் இன்று (ஏப்ரல் 14, 2026) பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலை வளாகத்தில் உள்ள ஒரு பாய்லர் குழாய் (Boiler tube) திடீரென வெடித்துச் சிதறியதில், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் உடனடியாக ராய்கர் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பாய்லர் வெடித்ததில் மேலும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக உள்ளே செல்வதற்காக பாய்லரின் வெப்பத்தைத் தணிக்க அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் துணை ஒப்பந்த நிறுவனமான என்ஜிஎஸ்எல் (NGSL) ஊழியர்கள் அங்கு பணியில் இருந்ததாக ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான சரியான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
