கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட பெரும் நெரிசல், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் மகிழ்ச்சியையும் சிதைத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கி, விஷ்ணு என்ற இரண்டு வயது சிறுவன் மூச்சுத்திணறி தனது பெற்றோரின் கைகளிலேயே உயிரிழந்தான்.
மேலும் மகனை இழந்த ஆறாத வடுவிலிருந்து மீளாத அந்தப் பெற்றோருக்கு, 13 வயதுடைய அவர்களது மகள் மட்டுமே ஆறுதலாக இருந்தாள். ஆனால் விதியின் சதி அந்த மகளையும் விட்டுவைக்கவில்லை. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட கடுமையான உட்காயங்கள் காரணமாக ஒரு மாத காலமாக மரணத்துடன் போராடி வந்த அந்தச் சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் ஒரே மாத இடைவெளியில் தங்களது இரு பிள்ளைகளையும் பறி கொடுத்த அந்தக் குடும்பம் இன்று சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. 41 பேர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை விளக்கும் விரிவான கள ஆய்வு அறிக்கை விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
