மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி அருகே உள்ள சஜ்வானி கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஆஷாபுரி மாதா கோவில் வளாகத்தில் இளைஞர் ஒருவர் செய்த அநாகரிகச் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி மாலை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்து தெய்வச் சிலைகளை அவமதித்ததோடு, கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டும் அஞ்சாமல் மிகவும் ஆபாசமான மற்றும் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டுள்ளான். கோவிலில் இருந்த சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தலைப்பாகை மற்றும் மாலைகள் காணாமல் போனதை அடுத்து, கோவில் நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
சிசிடிவி காட்சிகளில், அந்த இளைஞன் கோவிலுக்குள் வந்து மணிகளை அடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்த கேமராவைப் பார்த்தபடியே தனது ஆடைகளைக் களைந்து அநாகரிகமாக நடந்துகொண்டது பதிவாகியுள்ளது. மேலும், சிலையில் இருந்த வெள்ளைத் துணித் தலைப்பாகையைத் திருடி, அதைத் தனது தலையில் துண்டாகச் சுற்றிக்கொண்டு, திருடிய பொருட்களை மோட்டார் சைக்கிளின் டிக்கியில் வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இந்தச் செயலால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் மற்றும் கோவில் குழுவினர், ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட பர்வானி கோட்வாலி போலீசார், சிசிடிவி காட்சிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சோண்டுல் கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சௌஹான் என்பவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். விசாரணையில், அவன் தனது மாமனார் ஊரான சஜ்வானிக்கு அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. புனிதமான கோவில் வளாகத்தில் இத்தகைய ஆபாசமான செயலில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
